டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே ஊதியம் உயர்த்தியதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம்
டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே தன்னிச்சையாக ஊழியர்களின் ஊதியம் உயர்த்தியதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை இக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் 23 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுவதும், அரசுக்கு சொந்தமான இதர விற்பனை பிரிவுகளான அமுதம் அங்காடிகள், நியாயவிலை கடைகள், ஆவின் பாலகங்கள், கோஆப்டெக்ஸ் துணி கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன் பஞ்சபடியும் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுவதும் அரசு தனது நிறுவன ஊழியர்களிடையே மாற்றந்தாய் மனபான்மையோடு அணுகும் போக்கு சரியல்ல என்பதை முந்ைைதய ஆட்சிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் தொகுப்பூதியத்தில் சிறு உயர்வை அவ்வப்போது அறிவித்தார்கள். அதனை பின்பற்றியே தவெக அரசும் தொகுப்பூதியத்தை உயர்த்தியுள்ளது. இது ஊழியர்களின் வாழ்க்கை செலவினங்களை எந்தவகையிலும் ஈடுசெய்ய உதவாது என்பதை அரசு உணர வேண்டும்.
இந்த ஊதிய உயர்வைக்கூட ஊழியர்களின் பணி நிலைமையை கருத்தில் கொண்டு அறிவித்தாக தெரியவில்லை. அமைச்சரின் பேச்சில் கூடுதல் விலை வைத்து விற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே உள்ளது.அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி என்பது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய ஆட்சியாளர்களை போலவே நவீன கொத்தடிமை முறையை இந்த அரசும் தொடர்வது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.அரசு, இந்த தொகுப்பூதிய உயர்வை மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை சம்பளத்துடன்கூடி காலமுறை ஊதியம் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.