×

VSOP முதல் வீரன் வரை- 11 வகையான மதுபானங்களுக்கு டாஸ்மாக் தடை..!!

 

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிவுறுத்தலின்படி, என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 11 மதுபான வகைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "டாஸ்மாக்கின் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், டாஸ்மாக் கிடங்குகளின் மேலாளர்கள், மறுஅறிவிப்பு வரும் வரை விஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி (VSOP EXSHAW GOLD BRANDY), லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY), மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (பிளெண்டட் பிராந்தி), நெ.1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (இந்திய பிராந்தி), மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி (இந்திய பிராந்தி), ஹனி பீ ஃபைன் பிராந்தி (இந்திய பிராந்தி), என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் ஃபிரெஞ்சு பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகிய 10 பிராந்தி வகைகளும், என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் என்ற ரம் வகையையும் மறுஅறிவிப்பு வரும் வரை மேற்கண்ட மதுபான வகைகளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். எஃப்எல்2, எஃப்எல்3 உரிமையாளர்களும் உடனடியாக 11 வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்த வேண்டும்.

அதேபோல், டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மேற்கண்ட 11 மதுபான வகைகள், டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும். மதுபானங்களின் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்களும் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.