நாளை ராயப்பேட்டையில் தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு..!
ஹிந்து மக்கள் கட்சி - தமிழகம் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு, 15ம் தேதி (ஞாயிறு) நடைபெறுவதாக இருந்தது. மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி, உள்ளரங்க நிகழ்ச்சிக்கு, சென்னை மாநகர காவல்துறை தனித்தனியாக அனுமதி மறுத்தது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். விசாரித்த நீதிபதி, நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளார்.
அரசியல் கட்சியினர் வழக்கமான பேரணி நடத்தும் இடமான ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் ரமடா ஹோட்டல் வரையே அனுமதி கேட்டோம். அனைத்து கட்சிகளும் பேரணி நடத்தும் இடத்தையே நாமும் தேர்வு செய்திருந்தோம். போக்குவரத்து நெருக்கடி ஏற்படுமென கூறி, போலீஸ் எதிர்ப்பு தெரிவித்தது.ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், முஸ்லிம் அமைப்பினரும், எவ்வித முன்அனுமதியும் பெறாமல், அதே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். ஹிந்து மக்கள் கட்சிக்கு மட்டும் உள்நோக்கத்துடன் அனுமதியில்லை என கூறினர்.ராயப்பேட்டை மைதானத்தில் மாநாடு நடத்த முன்பதிவு செய்திருந்தோம். இதற்கு, 'மெட்ரோ ரயில் பணி நடக்கிறது; மருத்துவமனை இருக்கிறது; போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்' என கூறி, உள்ளரங்க நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர். இதுதொடர்பாக, ஐகோர்ட்டில் ஹிந்து மக்கள் கட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஆட்சேபம் அதில், 'ராயப்பேட்டை மைதானத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் நிகழ்ச்சி நடத்துகின்றன. ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி நடக்கிறது; கிறிஸ்தவ நிகழ்ச்சி நடக்கிறது. ஹிந்து மக்கள் கட்சிக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது' என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'பேரணி நடத்த வேண்டாம். மாநாடு உள்ளரங்க நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம்' என்பதோடு, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளார்.
கும்பகோணத்தில் சமீபத்தில் முஸ்லிம்கள் நடத்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். கிறிஸ்தவ அமைப்பினர் நடத்திய மாநாட்டில், முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்றனர். அவர்களது கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஹிந்துக்கள் இணைந்து சென்னையில் மாநாடு நடத்தும்போது, தடை விதித்தது, ஜனநாயக விரோதமானது. முதல் வரின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.