×

"2 வாரங்களுக்குள் கோயில் சொத்துகளின் தணிக்கை அறிக்கை" - தமிழக அரசு தகவல்!

 

தமிழ்நாட்டி உள்ள கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். 

அனைத்து கோயில்களின் தணிக்கை அறிக்கைகளும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். 2 வாரம் கால அவகாசமும் வழங்கினர். கோயில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிந்து விட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குழுக்கள் அமைக்கப்பட்டு, அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார். இதை ஏற்று வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.