×

"வெறும் வாய் தான்... செயலே இல்லை" - உலக தலைவர்களை தெறிக்கவிட்ட தமிழக மாணவி!
 

 

பன்னாட்டு காலநிலை மாற்ற உச்சிமாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்றது. இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டபின், இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டிலும் பங்கேற்றார். மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் இவர்கள் பேசியதை விட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேசியது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களைக் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார். பிரதமர் மோடி உட்பட. 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் பெயர் வினிஷா உமாசங்கர். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். இவர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்தற்காக சுற்றுச்சூழலுக்கான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ‘எர்த்ஷாட்’ விருதுக்குத் தேர்வானவர். இதன் காரணமாகவே காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் வினிஷாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தூய்மை தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய வினிஷா, "என்னுடைய தலைமுறையினர் பலரும் கோபத்திற்குள்ளாகியிருக்கிறோம். விரக்தியில் உள்ளோம். ஏனென்றால் உலக தலைவர்களின் வெற்று வாக்குறுதிகளைக் கேட்டு கேட்டு புளித்து போய்விட்டது. எப்போது தான் செயலில் இறங்குவீர்கள்? பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள். என்னிடம் கோபப்படுவதற்கு நேரம் இல்லை. ஏனெனில் நான் இந்தியாவைச் சேர்ந்தவள் அல்ல. இந்த பூமியைச் சேர்ந்தவள். பழைய விவாதங்களுக்குச் செல்ல விரும்பவில்லை. 

எதிர்கால திட்டங்களை நோக்கி அதற்கான தீர்வுகளை நாம் கண்டடைய வேண்டும்.புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபட்ட சூழல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத் துக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகள், திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எர்த்ஷாட் விருது பெற்றவர்கள், தேர்வானவர்கள் ஆகியோரின் கண்டுபிடிப்புகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க  வேண்டும். உங்களுடைய நேரம், பணத்தை எங்களிடம் முதலீடு செய்து வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள். 


எங்களுடன் இணைந்து செயலாற்றுங்கள். நீங்கள் தாமதித்தாலும், எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தை நாங்கள் நிறுத்தப் போவதில்லை. தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் எங்களோடு இணையுங்கள். அதற்காக ஒருபோதும் நீங்கள் வருந்தமாட்டீர்கள் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் கடந்த காலத்திலேயே முடங்கியிருந்தால் நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம்.