×

"ரூ.2,629 கோடி வெள்ள நிவாரணம் வேண்டும்" - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!

 

வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. சென்னையில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நிலை 2015ஆம் ஆண்டு வெள்ளத்தை கண் முன் நிறுத்தியது. டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மற்ற மாவட்டங்களில் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழு டெல்டாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்புகளைக் கணக்கிட்டு முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கையாக சமர்பித்துள்ளனர்.

நேற்று 300 கோடி ரூபாய் நிவாரணத்தை முதலமைச்சர் அறிவித்தார். மேலும் மத்திய அரசிடமும் தமிழ்நாடு அரசு நிவாரணம் கோரியுள்ளது. அந்த வகையில் மக்களவை திமுக தலைவரும் எம்பியுமான டிஆர் பாலு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்தார். அவரிடம் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையை வழங்கினார். இந்தச் சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. 

526 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்கள் அழிந்துள்ளன.  இதுவரை மழை, வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரம் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் 2,100 வீடுகள் சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட வெள்ள பாதிப்பு அறிக்கை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்தேன். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழ்நாட்டை  சீரமைக்க 2,079 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம். 

இதில் மழை நிவாரணமாக உடனடியாக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தமாக வெள்ள நிவாரண நிதியாக 2,629 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு சேதத்தைப் பார்வையிட ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு உடனடியாக இன்று தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதலமைச்சர் ஸ்டாலினுடமும் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். நிச்சயமாக தமிழ்நாடு அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும்” என்றார்.