×

"ஹாய் எலான் மஸ்க்"... ட்வீட் போட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு - டெஸ்டாவுக்கு எகிறும் டிமாண்ட்!

 

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. ஓலா, உபெர், பவுன்ஸ், வோகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை இந்தியாவில் தயாரித்து வருகின்றன. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 1 சதவீதத்துக்கும் குறைவானதே. உற்பத்தி ஒருபுறம் இருந்தாலும் நுகர்வு குறைவாகவே இருக்கிறது. மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதற்காக உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு அழைத்துவர பல்வேறு மாநில அரசுகாள் ஆர்வம் காட்டிவருகின்றன. டெஸ்லாவின் சந்தை மதிப்பீடு, மக்கள் மத்தியில் இருக்கும் புகழ் அடிப்படையில் இந்தியாவிற்குள் இழுக்க அதன் நிறுவனர் எலான் மஸ்க்குடன் நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இதனால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் ஆர்வம் காட்டுவார்கள். பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும் என எண்ணுகின்றன.

தெலங்கானா, பஞ்சாப், மே.வங்கம் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் டெஸ்லாவை அழைத்தன. அந்த வகையில் டெஸ்லாவுடன் கர்நாடகா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.  முதற்கட்டமாக பெங்களூருவில் தனது உற்பத்தி ஆலையைத் துவங்கவிருக்கிறது. இருப்பினும் டெஸ்லா நிறுவனம் இங்கே தொழில் தொடங்க விரும்பவில்லை. காரணம் இறக்குமதி வரி சலுகை. மத்திய அரசு டெஸ்லா கார்களுக்கு எவ்வித சலுகைகளையும் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது டெஸ்லா. 


ஆனால் மாநில அரசுகள் டெஸ்லாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றன. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்தியாவின் மொத்த மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 34%. ஆகவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழ்நாட்டுக்கு எலான் மஸ்க்கை வரவேற்கிறோம்.  உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு 9ஆவது இடத்தில் இருக்கிறது” என சுட்டிக்காட்டி அழைப்பு விடுத்துள்ளார்.