×

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய தமிழக அரசு... முக்கிய திட்டம் வாபஸ் - மகிழ்ச்சியில் விவசாயிகள்!

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதன்பின் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆண்டு எடப்பாடி தலைமையினான தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் புதிய திமுக அரசு பொறுப்பேற்றது. 

இச்சூழலில் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக கடந்த அக்டோபர் மாதம் டெண்டரும் கோரியிருந்தது. 

ஆனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைக்க பல்வேறு விவசாய சங்கங்கள், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்திட்டத்தை கைவிடக் கோரி நாகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விவசாயிகள் அறிவித்தனர். இதன் எதிரொலியாக நேற்று இந்த திட்டத்தை ரத்துசெய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அரசின் இம்முடிவு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.