×

வதந்தி குறித்து கவலைப்பட வேண்டாம் - வடமாநில தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல்

 

வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஆறுதல் தெரிவித்தார். 

கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி மற்றும் கானம் பகுதியில் உள்ள உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார். பணிகள் குறித்து வட மாநில தொழிலாளர்களிடம் கேட்டறிந்த அவர் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தியை  நம்ப வேண்டாம் என வட மாநில தொழிலாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.