×

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு

 

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
 
தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபடஹி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மாலை 5.15 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படும் தொழில்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:  இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிலுள்ள சந்தேகங்களை கவர்னர் கேட்டபோது அதற்கான விளக்கத்தை அளித்திருந்தோம். ஆனால் அந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆனால் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவரும் அவர்தான்.  எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக மீண்டும் கவர்னரிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி அதை திருப்பி அனுப்புவோம். இதுபற்றி சட்டசபையில் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்போது, புதிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் அதை சேர்க்க வாய்ப்புள்ளது.