விஜய்க்குத் திடீர் ஆதரவு கொடுத்த தமிழிசை! இந்த விஷயத்துக்காக விஜய்யை நான் பாராட்டுகிறேன்..!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களிடம் கருத்து கேட்டு வந்தது. அதன்படி, மக்களிடம் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் கொண்ட தேர்தல் அறிக்கை பெட்டியை, பாஜக மாநில தேர்தல் குழு பொறுப்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதற்கான நிகழ்வு, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ''குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்காமல், நாங்கள் நேரடியாக மக்களிடமே சென்று கருத்துக்களை கேட்டுள்ளோம். மக்கள் அதிக அளவில் கருத்துக்களை சமர்ப்பித்துள்ளனர். அதே போல, 17,500 'மிஸ்ட் கால்' மூலம் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்துக்கு இவ்வளவு ஆதரவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆதரவை பார்க்கும் போது பாஜக மீதும், தேசிய ஜனநாயக கூட்டணி மீதும் மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது.
நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து துறையை சார்ந்தவர்களையும் தனித்தனியாக சந்தித்துள்ளோம். அதனால் மிக மிக புரட்சிகரமான அறிக்கையாக இது இருக்கும்'' என பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ''திமுக, காங்கிரஸ் கூட்டணி முடிந்தது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். ஆனால், அவர்களின் ஆட்சி தான் முடிந்துவிட்டது. எங்கள் கூட்டணியை அடிமை என்று முதல்வர் சொல்கிறார். ஆனால், இன்றைக்கு திமுக காங்கிரசுக்கு அடிமையா, காங்கிரஸுக்கு திமுக அடிமையா? என்று தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது மிகப்பெரிய சாதனையை போன்று பார்க்கின்றனர். ஆனால், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் 'எக்ஸ்' பதிவுகளை பார்த்தால் விஷயம் புரியும்.
அந்தந்த மாநிலங்களில் அமைச்சர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று போட்டி போடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் எவ்வளவு ஊழல் செய்ய வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் செயற்கையான உரிமை போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பல ஊராட்சிகளில் நிர்வாகம் முடிந்து விட்டது. ஒரு வருடமாக அதற்கு தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி அதிகாரத்தை பறித்துவிட்டு மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்கள். மக்கள் இதனை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி குறித்து நாங்கள் யாருடனும் ஒப்பிடவில்லை. நாங்கள் நட்புணர்வோடு தொகுதிகளை பிரித்து வெற்றி பெறுவோம். எங்களின் ஒற்றை குறிக்கோள் திமுக ஆட்சியை அகற்றுவது மட்டும் தான்.
திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் தஞ்சையில் நடந்த கூட்டத்தில் தெளிவாக எடுத்து சொன்னார். அதற்காக அவைர நான் பாராட்டுகிறேன். நீட் ரத்து, விவசாயிகளுக்கு மானியம், கேஸ் மானியம் என பல விஷயங்களை விஜய் அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்'' என்றார்.
நீட் தேர்வு விலக்கு குறித்து அதிமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு? '' கொடுப்பதற்கு எங்களிடம் அது இல்லை; அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பை யார் என்ன செய்ய முடியும்?'' என்றார்.
நீட் தேர்வு ரத்து என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்தால் மத்திய அரசு பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு, ''நீட் விலக்கு என்று அதிமுக வாக்குறுதி கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களுக்கே தெரியும்'' என்றார்.