×

நான் அவமதிக்கப்படவில்லை; எதை பார்த்தும் அலரவும் இல்லை- முரசொலிக்கு தமிழிசை பதில்

 

திருச்சி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி பத்திரிக்கை நான் தெலுங்கானாவில் அவமதிக்கப்பட்டதாக எழுதி உள்ளார்கள். நான் அவமதிக்கப்படவில்லை.  எதை பார்த்தும் அலரவும் இல்லை. மரியாதை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன். ஒருவரை வரவேற்பது பாரதத்தின், தமிழகத்தின், தெலுங்கானாவின் கலாச்சாரம். அது தெலுங்கானாவில் கடைப்பிடிக்கப்படவில்லை என மக்களுக்கு கூறுவது தான் என் நோக்கம். ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தெலுங்கானாவில்  நடந்த நல்லதையும் தெரிவித்தேன். சரியாக நடக்காததையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தேன்.  

புதிய கல்வி கொள்கையை தெலுங்கானாவில் அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்தி அதை அமல்படுத்த கூறியிருக்கிறேன். புதிய கல்வி கொள்கை என்பது பல்வேறு பணிகளுக்கு பின்னால் பலரிடம் கருத்து கேட்ட பின்பு உருவாக்கப்பட்டது. அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் ஆனால் தேசிய கல்வி கொள்கையையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறுவது சரியல்ல, இதை அரசியலாக்க கூடாது. குழந்தைகள் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. அந்த தேர்வு அறிவிப்பை திடீரென அறிவிக்கவில்லை பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்து தான் அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலச்சட்டங்களுக்கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டி வரும், தன்னிலை அறியாது பேசியும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் ஆளுநர்கள், உணர்ந்திட வேண்டும் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடதக்கது.