×

75 நாட்களுக்குள் பூஸ்டர் செலுத்திக்கொண்டால் இலவசம்! பயன்படுத்திக்கொள்ள தமிழிசை அறிவுரை

 

ஜூலை 15 முதல் 75  நாட்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒன்றிய அரசு இலவசமாக அறிவித்துள்ளதால் மக்கள் அதனை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் புதுவை ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆடி மாத வெள்ளியை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில், பட்டினத்தார் கோவில், குரு தட்சிணாமூர்த்தி கோவில் உள்ள கோவில்களுக்கு சென்று ஆளுநர் தமிழிசை சுவாமி தரிசனம் செய்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “ஆடிவெள்ளியில் தனக்கு விருப்பமான வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மன மகிழ்ச்சியை அளிக்கிறது.  தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் கூட்டமான கோயிலுக்கு வரமுடிகிறது.பாரதப் பிரதமர் ஜூலை 15ஆம் முதல்  75 நாட்களுக்குள் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நமக்கு ஒன்றும் இல்லையே தடுப்பூசி போடணுமா என யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதால் தான் தற்போது பாதுகாப்பாக உள்ளோம். 

உலக முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று ஆரம்பித்துள்ளது. அதனால் இன்னும் பாதுக்காக இருக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது  அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்