கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் ஹிட் கொண்டு விரட்டியடிப்பார்- தமிழிசை
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக 4 எம்எல்ஏக்கள் தற்பொழுது தவெகவில் இணைந்துள்ளது மக்கள் தீர்ப்பிற்கு எதிரானது. இதனைத் தவெக ஊக்கப்படுத்துவது மிக மிக தவறு என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலையை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களுக்கு வருகை தந்து தரிசனத்திற்காக காத்துக் கிடக்கும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக்கொண்டு தரிசனம் செய்ய மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் சூழ்நிலையில் இயல்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றார். தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் என்றும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு மின்வெட்டு ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழ்நிலையில் மக்களிடம் அதிக அளவு எதிர்ப்புள்ளாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர் மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ ஆனால் தற்பொழுது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் எனவும் கூறினார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியில் மீண்டும் எழுந்து வருவோம் அதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதற்குண்டான பணிகளை செய்வோம் எனக் கூறினார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் இன்று வெற்றி பெற்று தற்பொழுது ராஜினாமா செய்து தவெக வில் இணைந்துள்ள 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் பல்வேறு கதைகளை கூறும் அவர்கள் மக்களின் தீர்ப்பை மதிக்காமல் ராஜினாமா செய்துள்ளது தவறு என்றும் இதனை தவெக ஊக்கப்படுத்துவது மிக மிக தவறு என்றார். முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ராஜினாமா செய்தது தவறு என்றும் விஜய் பிரதமரை சந்தித்தது மத்திய மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையில் இருப்பதுடன் தமிழக மக்களுக்கு பலன் தரும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
பிஎம் ஸ்ரீ என்பது எங்களின் கொள்கை முடிவு என அமைச்சர் கூறி இருப்பது அரசின் கொள்கை முடிவு அல்ல இது ஆட்சியின் கொள்கை முடிவு என்று கூறியவர் மாணவர்களுக்கு எது நல்லதோ அதனை மத்திய அரசு கொடுத்தால் தமிழக மக்களின் நலன் கருதி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து என்றார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் ஹிட் கொண்டு அடித்து விடுவார் என்றும் இளைஞர்களை வைத்து கூறுவது தவறு என்றும் இளைஞர்கள் தற்பொழுது ஆக்கபூர்வமாக உள்ளதாகவும் இளைஞர்களுக்காக இந்தியா முழுக்க பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர்நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறியவர் கொரோனாவை எதிர்கொண்ட பிரதமர் கரப்பான் பூச்சியையும் எதிர்கொள்வார் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.