×

ஓபிஎஸ், தினகரன் இணைப்பை டெல்லி பார்த்துக்கொள்ளும் - தமிழிசை சௌந்தரராஜன்

 

பொங்கல் பண்டிகை கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவேண்டும் என கேட்டுள்ளோம். ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் எங்களது கூட்டணியில் இணைவதை டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்‌ பேசுகையில், “பிரதமர் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது பொங்கல் பண்டிகைக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழக வரவேண்டும் என கேட்டுள்ளோம்‌. தேர்தல் வியூகம் மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது‌.

தேர்தலுக்காக பேச்சாளர் பயிற்சி முகாம், பொதுக்கூட்டங்கள், பிரிவு சார்ந்த மாநாடுகள் உள்ளிட்டவைகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெயரை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்கிறார்கள். இந்தியாவில் ராஜீவ் காந்தி பெயரை வைத்துக்கொண்டு விமான நிலையம் மற்றும் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. காந்தியின் கொள்கைகளை காங்கிரஸ் மறந்துவிட்டது. பிரதமர் காந்திய கொள்கைகளை முழுமையாக பின்பற்றுகிறார். நாளுக்கு நாள் எங்களது கூட்டணி வலுவடைந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் எங்களது கூட்டணியில் இணைப்பை டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.