☰
×

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி கேட்டதற்கான காரணம் என்ன? சீமானுக்கு எதிராக கொதித்தெழுந்த தயாரிப்பாளர்கள் 

 

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி கேட்டதற்கான காரணம் ஏன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 


புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல்  ஒரு வாரத்திற்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் அண்மையில் ஆணையிட்டிருந்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது என தனது எதிர்மறை விமர்சனத்தை பதிவு செய்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சீமானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், " புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அதிகாலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு 6 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று மிகுந்த அக்கறையுடன், தமிழ்த் திரையுலகிற்கு ஆதரவளித்து அனுமதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இந்தச் செயல்பாடு குறித்து, தாங்கள் 2026 நவம்பர் 4-ஆம் தேதியிட்ட கடிதத்தைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்து இக்கடிதத்தை அனுப்புகிறோம். மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகிவிடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன. அதற்குள் தவறான விமர்சனங்களும், படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, இங்கு திரைப்படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சினைகளைத் தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.

அதிகாலை 6 மணி காட்சிக்கு தயாரிப்பாளர்கள் அனுமதி கேட்டதற்கான காரணம் பற்றி, திரு @SeemanOfficial அவர்களின் கவனத்திற்கு நமது சங்கத்தின் கடிதம்.

Here’s our letter on why Producers sought the 6 am Special show in Tamil Nadu to Hon @CMOTamilnadu through Hon Minister @imrajmohan 🙏 pic.twitter.com/oSfGoCAQyr

— Tamil Film Active Producers Association (@tfapatn) November 5, 2026


இதற்குத் தீர்வாக, உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம், மாண்புமிகு தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், திரு. A. ராஜ்மோகன் அவர்கள் மூலமாக எடுத்துச் சென்றோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக அனுமதி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகமே பாராட்டி வருகிறது. ஆனால், இந்த அனுமதி வழங்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, இத்தகைய அனுமதி ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் ஒரு செயலாகும் என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசைக் குறை கூறி சீமான் கடிதம் வெளியிட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அதிலும், தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும், தற்போது பல திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகராகவும் திகழும் தாங்கள், எதற்காக இந்த அனுமதியை நாங்கள் கோரிப் பெற்றோம் என்பதை அறியாமல் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

எங்களது நியாயமான கோரிக்கையைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு இந்த அனுமதியை வழங்கியுள்ளார் என்பதை மீண்டும் ஒருமுறை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழ்த் திரையுலகின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் தாங்களும், தமிழ்த் திரையுலகின் நலன் கருதி வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியை வரவேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்"எனக் குறிப்பிட்டுள்ளது.