×

தமிழக அரசியலில் பரபரப்பு : அதிமுகவில் மீண்டும் விரிசலா..?

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த மே 10- ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, கடந்த மே 13- ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் மீது நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அத்துடன், தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இதனிடையே, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர், கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சபாநாயகரிடம் அளித்த மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இந்த சூழலில், கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

எனினும், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தனர். குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நடந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆக.05) தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.