தமிழக அரசியலில் பரபரப்பு : தவெக பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மற்றும் பத்திரிகையாளா ஜான் பிரிட்டோ ஆகியோர் மீது ஆற்காடு நகர காவல்துறையினர் (BNS) சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கண்ணமங்கலம் கூட்ரோடு, மாசாபேட்டை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அளித்துள்ள புகாரில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் விஜய் மோகனுடன் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருவரும் பேசி வந்த நிலையில், கட்சியில் பதவி வழங்குவதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், ஆபாச வீடியோ பதிவு செய்து மிரட்டினார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதோடு, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்ததுடன், தனது குற்றச்சாட்டுகளை விளக்கும் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், விஜய் மோகன் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகியோர் மீது BNS சட்டப்பிரிவுகள் 75, 76, 77 மற்றும் 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் புகார்தாரர் அளித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.