தமிழக அரசியலில் பரபரப்பு : மூன்றாவது அணியை அமைக்க திமுக திட்டமா..?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவுடனான உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸ் விஜய் தலைமையிலான தவெகவுடன் கைகோத்தது திமுக தலைமைக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
கடந்த 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் முன்மொழிந்தது முதல், நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஆதரவாக நின்ற திமுகவிற்கு இது பின்னடைவாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக, புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்ததுடன், நாடாளுமன்றத்திலும் காங்கிரசுக்கு அருகில் இருந்த இருக்கைகளை திமுக மாற்றிக் கொண்டது.
தற்போது காங்கிரசைப் புறக்கணித்து தேசிய அளவில் மாற்று சக்தியை உருவாக்கும் நோக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லியில் ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், கோல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அத்துடன், கரப்பான்பூச்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவுடனும் அவர் பேசியதாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மேற்கொண்ட மூன்றாவது அணி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.