தமிழக அரசியலில் பரபரப்பு : தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் - மு.க.ஸ்டாலின்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ஆவடி நாசர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5,000 பேர் இணையும் இந்த நிகழ்ச்சி வரலாற்றுப் பதிவு. தாய்க் கழகத்திற்கு வந்துள்ள அனைவரையும் தலைமைக் கழக தொண்டனாக வரவேற்கிறேன்.
பவள விழா காணும், ஆறு முறை ஆட்சி புரிந்த, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் 50 ஆண்டுகள் தாங்கி பிடித்த இயக்கத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் இருந்த கட்சிக்கு வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் எம்ஜிஆர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பிறகும் சட்டமன்றத்தில் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு உறுப்பினர் ஒருவர் பேசியபோது அப்போது முதலமைச்சராக எம்ஜிஆர் அந்த உறுப்பினரை கண்டித்து, "உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்; ஆனால் எனக்கு தலைவர் கலைஞர்" என்று தெரிவித்தார்.
நான் சைதாப்பேட்டையில் நாடகம் நடத்திய பொழுது அதனை காண்பதற்கு வந்த எம்ஜிஆர், நாற்காலி அமர மறுத்து தரையில் அமர்ந்து நாடகத்தை பார்த்தார் என்பது வரலாறு. அன்றைய தினம், நான் சாதாரண இளைஞனாக இருந்தேன். அதே இயக்கத்தில் இன்று தலைமை தொண்டனாக இருந்து உங்கள் அனைவரையும் வரவேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பல ஆண்டுகளாக அதிமுகவில் உண்மையாக உழைத்தவர். சட்டமன்றத்தில் ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் பேசக்கூடியவர். அவரை ஏமாற்ற முடியாது. அவர் திமுகவில் இணைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தேர்தல் முடிந்தால் ஆளுங்கட்சியை நோக்கி பலர் சேர்வார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் பதவிக்காக, பவுசுக்காக, பொறுப்பிற்காக இல்லாமல் கொள்கைக்காக திமுகவை சேர்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது. திமுக வலுவாக இருந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என இணைந்திருக்கிறீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்தது. தினமும் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து தொழில் தொடங்கினர். எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் பெருகின. அண்டை மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்களாக எதிரணியில் இருப்பவர்கள் கூட நம்மை பாராட்டினார்கள். சிலர் பொறாமைப்பட்டார்கள்.
ஆட்சி மாற்றத்தால் ஒரு மாதத்தில் அகல பாதாளத்திற்கு தமிழ்நாடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். சட்டம் ஒழுங்கை பற்றி சொல்லத் தேவையில்லை. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், கொள்ளை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றில் ஆளுங்கட்சியினரே சம்பந்தப்பட்டிருப்பது வேதனை.
மற்றொரு பக்கம் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் டேக் டைவர்ஷன் என்று திசை திருப்பும் வகையில் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் டெக்னிக் மக்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. ஓட்டு போட்டவர்களும் போடாதவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்குகின்றன. உலகின் பல நாடுகள், தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளன. அதனை கண்டு தான் லண்டன் மாநகரிலே காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" என பேரறிஞர் அண்ணா மூன்று முறை கூறி பெயர் வைத்தார். தமிழ்நாடு என்ற பெயர் உள்ளவரை அண்ணாதுரை பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதுபோல் திமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளவரை மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும்.
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; மூன்று மாதங்களில் கூட வரலாம், ஆறு மாதங்களுக்குப் பிறகும் வரலாம். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும். ஆனால் தவெக 108 இடங்களில்தான் வென்றன. திமுக வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில்தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்.
இந்த நிமிடத்திலிருந்து திமுகவின் வெற்றிக்காக உழைக்க தயாராக இருங்கள். உண்மையாக உழையுங்கள். உங்களுக்கான அடையாளம் உங்களைத் தேடி வரும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், "எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒப்பற்ற தலைவர் எங்கள் தலைவர். திமுக என்ற ஆலமரத்தின் விழுதாக திமுகவில் இணைந்து கொண்டிருக்கிறோம். தாயுள்ளத்தோடு திமுகவில் இணைத்து கொள்ளும் தலைவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சார்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளி வீர வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.