×

தமிழக அரசியல் 2026 : வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! 

 

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் பிளக்ஸ், பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்ககொண்டனர். இதனையடுத்து பேருந்து நிலையம், பொது கழிப்பறைகள், பள்ளி வளாக சுவர்களில் இருந்த அனைத்து அரசியல் கட்சி விளம்பர சுவரொட்டிகளையும் அப்புறப்படுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மலைப்பகுதிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு மலைப்பகுதியில் வெள்ளி மலை என்ற இடம் உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த 5 பேர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக, தேர்தல் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்து அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் இலக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இதில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் இல்லை. இந்த ஐந்து வாக்காளர்களுக்காகவே தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாக்குச்சாவடி பொருட்கள் மற்றும் இயந்திரங்களுடன் சுமார் மூன்று மணி நேரம் நடைபயணம் செய்து மலைப்பாதையை கடந்து அந்த இடத்துக்கு சென்று தேர்தல் பணிகளை மேற்கொள்கின்றனர்.இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் செந்தில் (46), பவுல் (38), ஜெயராணி (44), சுதா (43) மற்றும் ரோஹித் ஜெ (18) ஆகியோர் அடங்குகின்றனர். இதில் ரோஹித் ஜெ சமீபத்தில் 18 வயது பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார்.