×

தமிழ்நாட்டையே வெட்கப்பட வச்சிருச்சு! - CM விஜய் துவக்கி வச்ச விழாவில் நடந்த ஏஐ குளறுபடி.. வானதி சீனிவாசன் அதிரடி தாக்கு!

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தி அந்த வாகனத்தையும் முதல்வர் இயக்கிப் பார்த்தார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இந்தப் படைக்கான காவலர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத் துவக்க விழாவில், சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து வீடியோ வெளியிடப்பட்டது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் தமிழ்நாடு அரசின் இலச்சினை மற்றும் தமிழ் எழுத்துப் பிழைகள் இடம்பெற்றுள்ளது, விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.

பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.

காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?

பிரதமர் நரேந்திர மோடி, உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.

பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய… pic.twitter.com/DOCmdU4tRt

— Vanathi Srinivasan (@VanathiBJP) June 9, 2026