×

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைக்கு ரூ.464 கோடி நிலுவையில் உள்ளது- மத்திய அரசு

 

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைக்கு 464 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் ஒன்றிய அரசு நிதி வெளியிடாதது குறித்து பல மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ளதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் செல்வகணபதி பேசினார்.  நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு குறைத்து வருவது ஏன் என்றும் ஒன்றிய அரசுக்கு இத்திட்டத்தை முழுவதுமாக நிறுத்திவிடும் திட்டம் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஊரக மேம்பாட்டு இணையமைச்சர் கம்லேஷ் பஸ்வான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2022-23 நிதியாண்டில் ரூ.9743.53 கோடி, 2023-24 நிதியாண்டில் ரூ. 12616.53 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ. 7585.49  கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிலுவையில் இருந்த ஊதிய தொகை ரூ.2884.16 கோடி ஏப்ரல் 2025ல் முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களுக்கான செலவுப் பிரிவில் 31-3-2025 வரை நிலுவையில் இருந்த தொகை ரூ.858.66 கோடியில் 50% தொகை வழங்கப்பட்டுவிட்டது என பதிலளித்துள்ளார்.