×

தமிழகம் இருண்ட நிலைக்குப் போய்விட்டது..! – செய்யாறு சிறுமி விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!

 

தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை; 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். 

இத்தகைய மோசமான சூழலில், திமுக ஆட்சி, இன்று தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமிக்கும் குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.