தமிழக அரசு வழங்கும் திருமண நிதியுதவி: ரூ.50,000 + 8 கிராம் தங்கம் பெற புதிய நடைமுறை என்ன?
சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதாவது, முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி திட்டம், தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், திருமணத்திற்கு நிதியதவியை தமிழக அரசு அள்ளிக்கிறது.
முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் மூலம் கலப்பு திருமணம் தம்பதிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை நிதியதவியை தமிழக அரசு வழங்குகிறது. தம்பதியில் ஒருவர் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோராக இருக்க வேண்டும். இப்படி இருக்கையில் அவர்களுக்கு தமிழக அரசு நிதியதவி வழங்குகிறது. 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். டிகிரி முடித்த தம்பதிக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம் மூலம் பெற்றோர் இல்லாத ஆதரவற்ற ஏழைப் பெண்களுககு திருமண நிதியதவி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம், டிகிரி முடித்தவர்கள் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நிதியுதவி கிடைக்கும். உங்கள் திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னதாக, விண்ணப்பிக்க வேண்டும்.
தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் மூலம் கைம்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதாவது, மறுமணம் செய்து கொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. டிகிரி முடித்திருந்தால் அவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.
இந்த மூன்று நிதியுதவி திட்டங்களுக்கும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆனால், தற்போது திருமண நிதியுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதில் முக்கிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இனி நிதியுதவி திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை அரசு அலுவலங்களுக்கு சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு தான் பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் கால தாமதம், இடைத்தரகர்களின் தலையீடு போன்றவற்றையும் தடுக்கவும் ஆப்லைன் முறையை தமிழக அரசு ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளது. எனவே, இனி திருமண நிதியுதவி திட்டங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், திருமணம் முடிந்த 6 மாதங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டங்களுக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் இ சேவை மையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.