இளைஞர்களுக்கு மாதம் 1200 உதவித்தொகையுடன் தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி..!
தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு நிரந்தரமான மாதந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு 2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் 60% பங்களிப்புடனும் தமிழ்நாடு அரசின் 40% பங்களிப்புடனும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் 2.0 புதிய வடிவம் இவ்வாண்டு (2025-2026 ஆம் ஆண்டில்) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம் நீங்கலாக அனைத்து 37 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பயிற்சி திட்டத்தின்கீழ் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 40 தொழில் பிரிவுகளில் குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிக்குப் பின் உரிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. பயிற்சி வழங்குவதற்காக 38 பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இத்திட்டத்தில் பயிற்சியுடன் இளைஞர்கள் தங்களது அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடும் அறிவு. கணினி மற்றும் மின்னஞ்சல்கள் பயன்பாடு, ஆளுமை திறன், குழுவாக இணைந்து செயல்படுதல் போன்ற பல்வேறு மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுவதால் பயிற்சிக்கு பின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது எளிதாகிறது.
என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்?
குறிப்பாக, ட்ரோன் ஆப்ரேட்டர், மொபைல் போன் டெக்னீசியன், CNS இயக்கம், செவிலியர் பயிற்சி, ஜீனியர் சாப்ட்வேர் டெக்னாலஜி, AI அனலிஸ்ட், வெப் டெக்னாலஜி, வேர் ஹவுஸ் மேற்பார்வையாளர், JCB ஆப்ரேட்டர், சோலார் டிவி அமைத்தல், வெல்டிங், அட்வாண்ஸ் பேட்டன் மேக்கர். மெடிக்கல், டெக்னீசியன் போன்ற அதிக வேலை வாய்ப்பு உள்ள பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
பயிற்சி காலம், உதவித்தொகை விவரம்
பயிற்சி காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் பயிற்சி காலத்தில் சீருடை, உணவு, தங்கும் இடம் வசதி, பாட புத்தகங்கள், ஆகிய அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்த இளைஞர்களில் குறைந்தது 50% நபர்களுக்கு கட்டாய பணியமர்வும், 20% இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான உதவியும் வழங்கப்படும். பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.1,270 வீதம் ஆறு மாதங்களுக்கு ஊக்கத் தொகையும் பயிற்சியாளருக்கு வழங்கப்படும். மேலும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 25%, மலைவாழ் பிரிவினருக்கும் 2%, சிறுபான்மையினருக்கு 15% மற்றும் பெண்களுக்கு 39% (ஒட்டுமொத்தமாக) என பயிற்சியில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ள இளைஞர்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம், G.H.ரோடு, கடலூர் - 607 002 என்ற முகவரி அல்லது 9444094261 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண்.155330 தொலைபேசி எண்ணினை ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.