×

மதுக்கூடங்கள் அமைப்பதற்கான விதிகளில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை..! 

 

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. அந்த கடைகளை ஒட்டிய காலியிடத்தில், தின்பண்டம், குளிர்பானம் விற்க, தனியாருக்கு மதுக்கூட ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதற்காக, 'டெண்டர்' கோரப்பட்டு, தேர்வாகும் நபர்களுக்கு, மதுக்கூடம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

'டெண்டர்' நிபந்தனையில், மதுக்கூடம் நடத்த, அதன் கட்டட உரிமையாளரிடம், தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாகும். ஆனால், பல கட்டட உரிமையாளர்களே, மதுக் கடைகளுக்கு இடம் வழங்கி மதுக்கூடங்களை நடத்துகின்றனர். இதனால், மதுக்கூடங்களுக்கு ஒப்பந்தம் வழங்க, டெண்டர் கோரும் போது, புதிய நபர்களால் பங்கேற்க முடியவில்லை. பல ஆண்டுகளாக மதுக்கூடங்களை நடத்தி வருவோரே, தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்கள் குறைந்த விலைப்புள்ளி வழங்கி, மதுக்கூட ஒப்பந்தத்தை எடுப்பதுடன், டாஸ்மாக் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும், சரிவர செலுத்துவதில்லை.

இதனால், அந்நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.மதுக்கூடம் நடத்துவதற்கான ஒப்பந்தம், கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிதாக, 'டெண்டர்' கோரப்பட உள்ளதால், மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தம், மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.அடுத்த மாத தொடக்கத்தில், மதுக்கூடங்களுக்கு ஒப்பந்தம் வழங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுக்கூடங்கள் அமைப்பதற்கான விதிகளில், தளர்வுகளை அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, மதுக்கடையுடன் இணைந்தே, மதுக்கூடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இனி, மதுக்கடையை ஒட்டிய இடத்தில் அல்லது மதுக்கடையில் இருந்து, 100 மீட்டருக்குள் அமைந்துள்ள இடத்தில், மதுக்கூடம் அமைக்கலாம். மதுக்கூடத்திற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு, 15 சதுர மீட்டரில் இருந்து, 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதியால், மதுக்கூட டெண்டர்களில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தேர்வாகி வந்த நிலையில், இனி புதியவர்களும் பங்கேற்று, மதுக்கூடம் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.