சின்னம்மை பாதிப்புள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - தமிழக அரசு..!
பொன்னுக்கு வீங்கி என்னும் மம்ஸ், சின்னம்மை, தட்டம்மை போன்ற சுகாதார நோய்கள் வெயில் காரணமாக பரவ வாய்ப்புள்ளது. குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்த நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த நோய்கள் அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளது. இந்த நோய் தொற்றுகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவர் ஆலோசனைகளை பெற்றோர் பெற வேண்டும்.
அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
இந்நிலையில் சின்னம்மை பாதிப்புள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கொப்புளங்கள் காய்ந்து விழும் வரை சுமார் 10 நாட்களுக்கு அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வதுடன், நோய் முழுமையாக குணமடையும் வரை பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
ஆரம்பத்தில் காய்ச்சல், சோர்வு, உடல்வலி, பசியின்மை, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் தோல் கொப்புளங்கள் தோன்றும். சிவப்பு நிற கொப்புளங்கள் முகம், வயிறு மற்றும் மார்பு, முதுகு மற்றும் மூட்டுகளில் தோன்றும். பின்னர் அவை 4 முதல் 7 நாட்களுக்குள் பரவி காய்ந்து உலர்ந்துவிடும்.
4 நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல், கொப்புளங்களில் கடுமையான வலி அல்லது சீழ், அதிக தூக்கம், குழப்பம், அமைதியின்மை, நடப்பதில் சிரமம், கழுத்து வலி, அடிக்கடி வாந்தி, மூச்சுத் திணறல், கடுமையான இருமல், கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
இந்த அறிகுறிகள் நிமோனியா (Pneumonia), மூளையழற்சி (Encephalitis), கல்லீரல் அழற்சி (Liver Inflammation), செப்சிஸ் (Sepsis) போன்ற தீவிர சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.
நோய் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கைகள்:
1. நன்கு காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வெடுக்கவும்.
2. நிறைய தண்ணீர் குடிக்கவும்.
3. பழங்கள் சாப்பிடுங்கள்
4. வீட்டில் உள்ள மற்றவர்களுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும்.
5. நீங்கள் பயன்படுத்தும் துணி மற்றும் பிற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் பயன்படுத்திய பொருட்களை, ப்ளீச்சிங் கரைசல் போன்ற கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யுங்கள்.
6. அரிப்பு உள்ள இடத்தில் கலமைன் லோஷனை (Calamine Lotion) தடவவும்
7. மென்மையான ஈரத்துணியால் உடலை அடிக்கடி துடைக்கவும். சாதாரண நீரில் குளிப்பது அரிப்புகளை குறைத்து நிவாரணம் அளிக்கும்.
8. உங்கள் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருங்கள். நீங்கள் கொப்புளத்தை சொறிந்தால், உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.
9. நீங்கள் சிக்கன் பாக்ஸ் சிகிச்சை பெற்றாலும், வழக்கமான மருந்துகளை நிறுத்த வேண்டாம்.
இதுவரை சிக்கன் பாக்ஸ் இல்லாதவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோயைத் தவிர்க்கலாம்.
நோய் பாதிக்காதவர்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கைகள்:
சின்னம்மை நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த உத்தி தடுப்பூசி. வெரிசெல்லா தடுப்பூசி, பொதுவாக இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. முதல் டோஸ் 12-15 மாத வயதில் பரிந்துரைக்கப்படுகிறது, இரண்டாவது டோஸ் 4-6 ஆண்டுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.
தடுப்பூசி தனிநபர்களை சிக்கன் பாக்ஸிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடுமையான நோய் மற்றும் நோயினால் ஏற்படும் கடும்சிக்கல்களின் வாய்ப்பைக் குறைக்கிறது.
மேலும் நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பது சிக்கன் பாக்ஸ் பரவுவதை தடுக்க உதவும். சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின் போது மூக்கை கையால் மூடுவது, நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் பிறருக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க அறிகுறிகள் தென்படும்போது வீட்டிலேயே இருப்பது போன்றவை முக்கியமான நோய் தடுப்பு முறைகளாகும்.