☰
×

தமிழ்நாடு அரசு வெளியிட்ட 'வெற்றி' அறிவிப்பு! "மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடன்!"

 

தமிழ்நாட்டில் மகளிர் தொழில்முனைவோரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்களின் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தகுதியான மகளிர் தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், நவீனமயமாக்கவும், பல்வகைப்படுத்தவும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலம் வாங்குதல், கட்டடங்கள் கட்டுதல், உள்நாடு அல்லது வெளிநாடுகளிலிருந்து புதிய இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த கடனைப் பயன்படுத்தலாம். மகளிர் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டு, பெண்கள் குறைந்தபட்சம் 51% பங்குரிமையை கொண்டுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தனியுரிமை / ஒரு மனித நிறுவனங்கள் (Proprietary / One Person Company), கூட்டாண்மை / வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership / LLP Firms), தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (Private / Public Ltd. Company) ஆகியவை அடங்கும். மேலும், முதல்முறை தொழில்முனைவோர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) மூலம் சிறப்பு தொழிற்பயிற்சியும் வழங்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.500 லட்சம் (அதாவது ரூ.5 கோடி) வரை கடன் பெற முடியும்.
  • புதிய நிறுவனங்கள் திட்டச் செலவில் 20 சதவிகிதத்தையும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள் 15 சதவிகிதத்தையும் சொந்த பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
  • முதன்மை கடன் வட்டி விகிதத்தின் (PLR) அடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டுக்கு 9.95 சதவிகிதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கடனை மாதத்தவணை முறையில் திருப்பி செலுத்தலாம். அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை தவணை ஒத்திவைப்பு காலம் உட்பட மொத்தம் 9 ஆண்டுகள் வரை கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.
  • கடன் பெறுவதற்கு CIBIL MSME தரவரிசை (CMR) 7-க்கு குறைவாகவும், தனிநபர் CIBIL Score 600-க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
  • புதிய நிறுவனங்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கும் குறைவாக செயல்பட்டுவரும் நிறுவனங்கள், பெறும் கடன் தொகையில் 40 சதவிகித மதிப்பிலான அசையா சொத்தை பிணையமாக வழங்க வேண்டும்.
  • 3 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல செயல்பாட்டு பதிவுடன் இயங்கி வரும் நிறுவனங்கள், கடன் தொகையில் 20 சதவிகித மதிப்பிலான அசையா சொத்தை பிணையமாக வழங்கினால் போதுமானது. இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக்கட்டணம் (Processing Fees) வசூலிக்கப்படாது.
  • அதேபோல், கடனை முன்கூட்டியே செலுத்தி முடிப்பவர்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தில் 0.25 சதவிகிதம் சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • மகளிர் தொழில்முனைவோர் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 கோடி வரை நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.