தமிழ்நாடு அரசின் ரூ.25,000 உதவித்தொகை! யாருக்கு கிடைக்கும்..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
பழங்குடியின மக்களின் வளமான வரலாறு, தனித்துவமான கலாச்சாரம், தொன்மையான பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், பழங்குடியினர் குறித்த ஆய்வுகளுக்கு புத்துயிர் அளிக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுதோறும் 70 திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
தற்போது கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, முனைவர் அல்லது முனைவர் பட்ட மேலாய்வு ஆகிய படிப்புகளை பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள்: ஆறு மாத கால ஆய்வு திட்டங்களுக்கு, மாதம் ரூ.10,000 நிதியுதவி பெறலாம். இந்த பிரிவில் 25 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்கள்: மூன்று ஆண்டுகள் வரையிலான நீண்ட கால ஆய்வுகளுக்கு, மாதம் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும். இந்தப் பிரிவில் 45 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின சமூகம் தொடர்பான தலைப்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த மதிப்புமிக்க நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், Fellowship.tntwd.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 12-ம் தேதி தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 12 ஆகும். கல்வி மற்றும் சமூக ஆய்வு ஆகிய இரண்டையும் இணைக்கும் இந்த அருமையான வாய்ப்பை, தகுதியுள்ள மாணவர்கள் தவறவிடாமல் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.