×

விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு..!

 

மத்திய அரசின் டிஜிட்டல் விவசாயக் கொள்கையான அக்ரிஸ்டாக் போர்ட்டலில் அனைத்து விவசாயிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருக்கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும் விவசாயிகளின் விவரங்களைச் சேகரிக்க வேளாண்மைத் துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளன.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள், மானாவாரி நிலங்கள், தோப்பு மற்றும் தரிசு நிலங்கள் ஆகியவற்றில் பயிர் செய்து வரும் குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

இந்தத் தரவு சேகரிப்பின் மிக முக்கியமான நோக்கம், விவசாயிகளுக்குத் தேவையான அரசின் நிதி உதவிகளை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதுதான். குறிப்பாக விவசாயி பதிவேடு (Farmer Registry) எண் பெற வேண்டும். அக்ரிஸ்டாக் போர்ட்டலில் விவரங்கள் பதிவேற்றப்பட்டவுடன், ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இந்த எண் இருந்தால் மட்டுமே பிஎம் கிசான் போன்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையைப் பெறுவதில் சிக்கல் இருக்காது.பொதுவாகக் குத்தகை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இப்போது, அக்ரிஸ்டாக் மூலம் அடையாள அட்டை வழங்கப்படுவதால், திருக்கோயில் நிலங்களில் பயிரிடும் விவசாயிகள் தங்களது பயிர்களை எளிதாகக் காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளின் போது இழப்பீடு பெற முடியும்.

அரசாணையின்படி, விவசாயியின் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள், பயிரிடப்படும் நிலத்தின் வகை மற்றும் அடங்கல் விவரங்கள், பயிரிடப்படும் பயிர்களின் விவரம், குத்தகைதாரராக இருந்தால், அதற்கான ஒப்பந்த விவரங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த விவரங்களைச் சேகரிக்க வேளாண்மைத் துறைச் செயலாளர் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார். இதன்படி, அனைத்துச் சார்நிலை அலுவலர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட திருக்கோயில் நில விவசாயிகளின் விவரங்களை முழுமையாகத் தொகுத்து, ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.