பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 179 பேருக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு – தமிழக அரசு வெளியீடு!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல் ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறை ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டும் காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 பேருக்கும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், ஊர்காவல் படையில் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 பேருக்கும், விரல் ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும் அவர்களின் மெச்சத்தக்க பணியைப் பாராட்டி தமிழக முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரரின் துணிச்சலான செயலைப் பாராட்டி, அவருக்கு தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, கடந்த மே 19ஆம் தேதி காலை சுமார் 9:45 மணியளவில், நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ராட்சத கடல் அலையில் அக்குழந்தைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் 9 வயது சிறுமியான வைஷ்ணவியை பொதுமக்கள் மீட்டனர். ஆனால், 9 வயது சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அப்போது தனது இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர்.ராஜசேகர், சிறுவன் கடலில் சிக்கியிருப்பதை அறிந்தார்.
உடனடியாக ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த அவர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு இருந்த உயிர்காக்கும் மிதவையைப் பயன்படுத்தி, தனது சொந்த பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்படாமல் கடலுக்குள் நீந்திச் சென்றார். சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் சைலேஷை மீட்டார். பின்னர், சிறுவனை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்து, அவரது உயிரைக் காப்பாற்றினார்.
இதனால், தீயணைப்பு ஓட்டுநர் ராஜசேகரின் இந்த துணிச்சலான செயலை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். பணியில் காட்டிய துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தைப் பாராட்டும் வகையில், ராஜசேகருக்கு "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட பதக்கங்கள் அனைத்தும் முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.