×

தெருநாய்களை கருணைக்கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி..!!

 


நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நாய்க்கடி தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள் உள்பட பெரியவர்கள வரை பலரையும் தெருநாய்கள் துரத்திக் கடிப்பது, இதனால் குழந்தைகள்  உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் நிறைய நடைபெறுகின்றன.  இந்த நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதுதொடர்பாக நாடாளுமன்றங்களிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிகரித்து வரும் ரேபிஸ் நோயால், ஏற்கனவே கேரளாவில் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.  

இதனைத்தொடர்ந்து தற்போது   மோசமாக காயமடைந்த மற்றும்  நோய் வாய்ப்பட்டு தெருவில் சுற்றி தெரியும் நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.  குறிப்பாக தெருநாய்க்கடியால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாலும், இந்த அரசாணையையும் இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  அதில்,  பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணை கொலை செய்யப்பட வேண்டும் என்றும்,   கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 மேலும் கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான வழிகாட்டு நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும்,  சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையும் தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்தும் விதமாகவும், ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறையும் என்பதாலும்  கால்நடை துறையின் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.