×

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.4,626 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு கோரிக்கை

 

தமிழகத்தில்  தொடர்ந்து பெய்த மழையால், பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய உள்துறை இணைசெயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு கடந்த 21-ம் தேதி சென்னை வந்தது. இதை தொடர்ந்து இக்குழு, ராஜிவ் சர்மா தலைமையிலான 4 பேர் ஒரு குழுவாகவும், ஆர்.பி.கவுல் தலைமையிலான 3 பேர் ஒரு குழுவாகவும் பிரிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மகாபலிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை  வெள்ளம் பாதித்த இடங்களையும் பார்வையிட்டனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களையும், அடுத்த நாள் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இரண்டு நாட்களாக ஆய்வு செய்த பின்பு ஒன்றிய குழுவினர் முதலமைச்சரை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.  அப்போது, தமிழ்நாட்டிற்கு  உடனடி நிவாரண உதவியாக  550 கோடி ரூபாயும், நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 79 கோடியும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில் தற்போது மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4,626 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ரூ.2,629 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் நிதி வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 2021 அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்டமாக ரூ.549.63 கோடி தேவை  என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

வெள்ளச் சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.2,079.86 கோடி உள்பட மொத்தம் ரூ.2,629.29 கோடியும், வெள்ளச் சேதங்களை மதிப்பீடு செய்த நிலையில், சீரமைப்பு பணிக்கு ரூ.4,625.80 கோடியும் கூடுதலாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.