காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு உத்தரவை செயல்படுத்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கன அடி நீர் தான் வருகிறது
ஆகஸ்ட் 3 நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சியும், கபினி அணையில் 18.6 டிஎம்சியும், ஹாரங்கியில் 7.8 டிஎம்சியும் தண்ணீர் உள்ளன.. கர்நாடக மாநிலம் ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. 77.53 டிஎம்சி தண்ணீர் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 26.954 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். விகித்தாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 26.954 டிஎம்சி கிடைக்க வேண்டும். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் 4.53 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்தது. ஜூன் முதல் மே வரை சுற்றுச்சூழல் மற்றும் பாசனத் தேவைகளுக்குத் தண்ணீர் திறக்க வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது. ஆகஸ்ட் 12-க்குள் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 4.536 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.