நேர்மையான அதிகாரிகளை பணியிலிருந்து தூக்கும் தவெக அரசு!
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியைப் பதவி விலகுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜோதி நிர்மலா ஐஏஎஸ் மார்ச் 2024-ல் மாநில தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் மே 2029-ல் முடிவடைகிறது. ஜோதி நிர்மலா ஐஏஎஸ் நேர்மையை பாராட்டி கடந்த ஆட்சியில் அவருக்கு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் வகித்து வந்த பதவிக்காலங்களில் தனது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவும் அவரது நேர்மையை கௌரவிக்கும் வகையிலே இந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு ஜோதி நிர்மலா சாமியை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த காலங்களில் நேர்மையான அதிகாரிகள் பணியில் இருக்கும் போது அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் திராவிட கட்சி அரசுகள் அளித்ததில்லை. மாறாக அவர்கள் பணிபுரியும் வரை அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்து வந்தன.ஆனால் தமிழக வெற்றிக்கழக அரசு அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகிறது.
ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை தொடர்ந்து பணியில் அமர்த்தாமல் அவரது பதவியை பறிப்பது என்பது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். மாநில தேர்தல் ஆணையரை (State Election Commissioner) மாநில அரசால் எளிதாகப் பதவி விலகச் சொல்லவோ, தானாகப் பதவி நீக்கம் செய்யவோ முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article 243K -இன் படி, மாநில தேர்தல் ஆணையர் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இணையான தகுதியைப் பெறுகிறார். ஒரு மாநில தேர்தல் ஆணையரை, உயர் நீதிமன்ற நீதிபதியை [Impeachment] நீக்குவது போன்ற மிகக் கடினமான மற்றும் முறையான நாடாளுமன்ற/சட்டமன்ற நடைமுறைகள் மூலமாக மட்டுமே நீக்க முடியும். முறைகேடான நடத்தை (Proved Misbehaviour) அல்லது கடமைகளைச் செய்ய இயலாத சூழல் (Incapacity) ஆகிய காரணங்களை நிரூபித்தால் மட்டுமே அவரைப் பதவியில் இருந்து நீக்க இயலும். சுதந்திரமாகவும், நடுநிலையாகவும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்காமல், மிகக் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.