×

#BREAKING தமிழகத்தின் முதல் பெண் காவலர் காலமானார்

 

​தமிழக காவல்துறையின் வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு காவல் துறையினரும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1973-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்த முதல் பெண் காவலர் என்ற பெருமையைப் பெற்றவர் சிசிலி. தனது திறமையாலும், அர்ப்பணிப்புடன் கூடிய பணியினாலும் அடுத்தடுத்து உயர்வுகளைப் பெற்றார். தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் இரண்டாவது பெண் உதவி ஆய்வாளராக (Sub-Inspector) பதவி உயர்வு பெற்றார்.
​தனது பணிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இதற்காக பல்வேறு பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, தமிழக முன்னாள் முதல்வர்  ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து உயரிய விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய சிசிலி, இறுதியாக சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவின் ஆய்வாளராக  பணியாற்றி, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.இவரது கணவர் சூசை மாணிக்கமும் காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

மறைந்த சிசிலிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ​சென்னை பாலவாக்கம், டி.டி.எஸ்.ஜி. பச்சையப்பன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அக்கரை உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.