☰
×

தமிழகத்தையே உலுக்கிய தப்பியோட்ட சம்பவம்: பரபரப்பை ஏற்படுத்திய கைதி மீண்டும் கைது!

 

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தேன்மலை பகுதியைச் சேர்ந்த ராஜா(25). இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 2024-ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நீதிபதி சுதாகர் முன்னிலையில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணையின் முடிவில் ராஜா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களைக் கேட்ட ராஜா, நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்து நைசாக நழுவித் தப்பியோடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவரைத் தேடியபோதுதான் அவர் தப்பியோடியது தெரியவந்தது.

ராஜா மாயமானதை அடுத்து போலீசார் அவரை தேடும் பணியை தொடங்கினர். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களுக்கு போலீசார் விரைந்து அவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தப்பியோடிய கைதி ராஜாவை திண்டுக்கல் அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.