☰
×

இன்று ஆந்திரா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்..!

 

சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க இரு மாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு உரிய அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்தச் சூழலில், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவது தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறையக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரமும் கவனம் பெற்றுள்ளது.

தமிழக முதல்வரின் பயண விவரம்

  • சென்னையில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு ஆந்திரா புறப்படுகிறார்.
  • மாலை 3.30 மணிக்கு கன்னாவரம் விமான நிலையத்துக்கு முதலமைச்சர் விஜய் செல்கிறார்.
  • முதல் நிகழ்வாக மாலை 4.15 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார்.
  • மாலை 6 மணிக்கு கனகதுர்கா கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்கிறார்.
  • இரவு 8 மணிக்கு விஜயவாடா உத்சவ் 2.0 கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
  • இரவு 9 மணி அளவில் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார்.
  • இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா சென்று அந்த மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது வருகைக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடக முதல்வர் கேட்டுக் கொண்டதன்பேரில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.