×

2030ம் ஆண்டை இலக்காக வைத்து 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..! 

 

"உங்கள் கனவ சொல்லுங்க" திட்டத்தின் நிறைவாக "கனவுகள் மெய்ப்படும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான எனது தொலைநோக்குப் பார்வை, அதாவது, "தமிழ்நாடு 2030" 14 முக்கிய அம்சங்களை அறிவிப்பதாக கூறினார். 

2030-ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் ஐந்து இலட்சம் வீடுகளும். நகர்ப்புறங்களில் இரண்டு இலட்சம் வீடுகளும் கட்டி, தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம்.

"நலமுடன் தமிழ்நாடு 2030" தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல். மூன்று முக்கிய திட்டங்களும் இருக்கிறது.முதல் திட்டம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையிலேயே சிறப்பு முகாம்கள்!
இரண்டாவது திட்டம் - தாய் சேய் நலனில் IMR மற்றும் MMR குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம் பெற சிறப்பு நடவடிக்கை.

இரண்டாவது துறை - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: “நலமுடன் தமிழ்நாடு 2030” தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மூன்று முக்கிய திட்டங்களும் இருக்கிறது. முதல் திட்டம் - நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையிலேயே சிறப்பு முகாம்கள்! இரண்டாவது திட்டம் - தாய் சேய் நலனில் IMR மற்றும் MMR குறைக்கும் தரவரிசையில் இந்தியாவிலேயே முதல் இடம் பெற சிறப்பு நடவடிக்கை. மூன்றாவது திட்டம் - ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்!

மூன்றாவது துறை நலத்துறை -வேளாண்மை மற்றும் உழவர்

மண்வள அட்டைகள் 43 இலட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு இலட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். 

வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 இலட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும்!
உணவு உற்பத்தி 125 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு, ஆயிரம் மதிப்பு கூட்டல் மையங்கள் நிறுவப்பட்டு, ஒரு இலட்சத்து 25 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

நான்காவது துறை - பள்ளிக் கல்வி துறை: ஒவ்வொரு பள்ளியும் அறிவின் ஆலயமாக இருக்கிறது! ‘இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு – 2030’! இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்ந்து, வெற்றியுடன் வெளியேறும் நிலையை உருவாக்குவோம்! அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு ‘Smart Class Room' அமைக்கப்படும்! 300-க்கும் மேற்பட்ட நூலகங்கள் ‘Library 5.0' என்ற புரட்சிகர நவீன அறிவுக் கோட்டைகளாக மலரும். முக்கியமாக, ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ மூலம் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், உடல்நலத்திற்காக விளையாட்டையும் - உளவியல் பாதுகாப்பையும் - வாழ்க்கைத் திறன் கல்வியையும் உறுதிப்படுத்துவோம்.

ஐந்தாவது - உயர்கல்வித் துறை!

2030-ஆம் ஆண்டிற்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 90 விழுக்காட்டை எட்டும் வகையில், நிறுவன கட்டமைப்பு விரிவாக்கப்படும்

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் A.l. ஆய்வகம் உருவாகும். பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் வேர்விட்டு. நம் மாணவர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கு வழி வகுக்கப்படும்.

ஆறாவது - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை: "நல்லிணக்கத்தின் அடையாளம், வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு" ஜவுளி, தோல் ஆடை, கைவினை, கணினி தொழிற்பயிற்சி போன்ற துறைகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்!

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். அமைச்சர் மெய்யநாதன் கேட்டதுபோல, தேவைப்படும் இடங்களில், 'சமூகநீதிக் கல்லூரி விடுதிகள்' திறக்கப்படும்! பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வணிகம் தொடங்க, நிறுவன கடன் வசதி அதிகரிக்கப்படும். சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

ஏழாவது -ஆதிதிராவிடர் நலத் துறை!

 2030-ஆம் ஆண்டுக்குள், வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

12-ஆம் வகுப்புக்குப் பின், உயர்கல்வி நுழைவு, தொழிற்கல்வி இணைப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு என முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். 

எட்டாவதாக - ஊரக வளர்ச்சி துறை: “கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம்!”

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கிராம, நகர இடைவெளியை குறைப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் குடியரசு தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் சொன்னார். அவர் முன்வைத்த, “கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல்” எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில், கிராமங்கள் வளர்த்தெடுக்கப்படும். ஊராட்சிகளில் வருவாய் ஈட்டும் உற்பத்தித் திறன் கொண்ட நிலையான சொத்துக்களை உருவாக்குவதை முன்னுரிமையாக கொண்டு கிராம சந்தைகள், விளையாட்டு மற்றும் நல்வாழ்வு உட்கட்டமைப்புகள், கிராமப்புற நீர்நிலைகளை செம்மைப்படுத்தி காத்தல், கிராமங்களை பசுமையாக்குதல், வேளாண் சாராத கிராமப்புற வேலைவாய்ப்பினை வழங்குதல், குறைந்த அரசு செலவில், அதிக பயன் பெறுதல் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கத்தை அடைய, ஒரு உன்னதமான திட்டம் உருவாக்கப்படும். அதற்கு, உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் என பெயரிடப்படும்.

காந்தியடிகள் பெயர் நீக்கப்பட்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில், அவரின் பெயரை நம்முடைய மாதிரி கிராமங்கள் திட்டத்திற்கு சூட்டியிருக்கிறோம். இதன் முதற்கட்டமாக - பத்து ஊராட்சிகளில், இந்த திட்டம் இப்போதே செயல்படுத்தப்படும்.

ஒன்பதாவதாக - தொழில்துறை!

18 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு, 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும்.
"Make In Tamil Nadu" ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர் பெற.மாவட்டந்தோறும் நவீன தொழிற்பூங்கா, ஒரு சிறப்பு தொழில் தொகுப்பு. பொது வசதி மையம் ஆகியவை அமைக்கப்படும்.
ஜவுளித் தொழிலும், நவீனமயமாக்கப்பட்டு, திருப்பூர்-கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.
தமிழ் மொழிக்கென்றே ஒரு 'Large Language Model' உருவாக்கப்படும்.

பத்தாவது, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை: நம்முடைய உயிர்வளம் காப்போம்! அலைகளோடு போராடி வாழும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து, உற்பத்தியை 200 டன்னிலிருந்து 400 டன்னாக உயர்த்துவோம். மீனவ மகளிருக்காக, கடல்பாசி சாகுபடியை 15 ஆயிரம் டன்னிலிருந்து 30 ஆயிரம் டன்னாக வளர்ப்போம். உள்நாட்டு மீன் உற்பத்தியை 2.67 லட்சம் டன்னிலிருந்து 4.50 லட்சம் டன்னாக உயர்த்துவோம்.

மீன் விதை உற்பத்தியை 100 கோடியிலிருந்து 200 கோடியாக இரட்டிப்பாக்கி, புதிய அரசு மீன் பண்ணைகளை நிறுவுவோம். கால்நடை எண்ணிக்கையை 2030-ஆம் ஆண்டிற்குள் 3 கோடியாக உயர்த்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவோம். தீவனப் பஞ்சம், இனி தமிழ்நாட்டில் இல்லை என ஒரு லட்சம் ஏக்கரில் தீவனப் பயிர்ச்சாகுபடி செய்யப்படும். தற்போது தினமும் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டை, 2030-க்குள் 4.50 கோடி லிட்டராக உயர்த்தும் இலக்கோடு முன்னேறுவோம்.

பதினொன்றாவதாக நகராட்சி நிருவாகத் துறை!

2030-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்பகுதியில், 20 விழுக்காடு பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்!
கழிவுநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டு. சுத்திகரிக்கப்பட்டு, 30 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்படும்.
2030-ஆம் ஆண்டில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நகர்ப்புற நிலங்களில் குறைந்தது 3 விழுக்காடு "Sponge City" உட்கட்டமைப்பாக மாற்றப்படும்.

பன்னிரெண்டாவதாக - MSME துறை: 40 லட்சத்து 56 ஆயிரம் பதிவுபெற்ற MSME நிறுவனங்களுடன் நம் நாட்டில் 3-ஆம் இடம் வகிக்கும் தமிழ்நாடு, வரும் 2030-ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2030-ஆம் ஆண்டில், இந்தத் துறை சார்பாக ஐந்து சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, உணவு பதப்படுத்துதல், தேங்காய் நார் உற்பத்திப் பொருட்கள் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில், நம்முடைய MSME நிறுவனங்கள் பங்கேற்பதற்கு வழிவகைகள் செய்யப்படும். ஆண்டுதோறும் MSME நிறுவனங்களின் ஒரு மாபெரும் பன்னாட்டு தொழில் கண்காட்சி நடத்தப்படும்.

பதிமூன்றாவதாக, நெடுஞ்சாலைத் துறை!

நவீன சாலை தொழில்நுட்பம். A.I. கண்காணிப்பு. Intelligent Transport Systems ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். விபத்துகள் குறைக்கப்படும்.
கோவில் நகரங்களுக்கும், கடலோர சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு, உலக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் தரத்தில் அமைக்கப்படும்.

பதினான்காவதாக - கைத்தறி மற்றும் ஜவுளி துறை: நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உற்பத்தியை பன்மடங்காக்கி, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும். G.I. பதிவு பெற்ற தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் - தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படும்!

இவை மட்டுமல்ல, இன்னும் பல துறைகளில் எனக்கு பல கனவுகள் இருக்கிறது! தமிழ்நாட்டிற்கான எனது மாபெரும் தமிழ்க் கனவு என்ன தெரியுமா! நம்முடைய நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும்! எங்கும் சமூகநீதி ஓங்க வேண்டும்! அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற வேண்டும்! எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! இப்போது நான் சொன்னதெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினின், Statement மட்டும் கிடையாது!

இது, உங்கள் கனவு! தமிழ்நாட்டு மக்களின் கனவு! பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கண்ட கனவு! இவை அனைத்தும் செயல்வடிவம் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல் திட்டங்கள் வகுக்கப்படும் . இது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கின்ற உறுதி மொழி! இதையெல்லாம் நனவாக்கி, 2030-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவோம். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! நாங்கள்தான் மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்! வெல்வோம் ஒன்றாக!" என்றார் முதல்வர் ஸ்டாலின்.