☰
×

நாளை முதல்வர் விஜய் தலைமையில் கூடுகிறது தமிழக அமைச்சரவை..!

 

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில், அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10:30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 436 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒவ்வொரு துறையும் எட்ட வேண்டிய இலக்குகள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், அந்த ஆய்களின்போது முன்வைக்கப்பட்ட முக்கியப் பரிந்துரைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் சில திட்டங்கள் தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகள், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் துறைவாரியான இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.