×

 'வகுப்பறைகள் நெருக்கடியில்' - தமிழக பாஜக வெளியிட்ட திடுக்கிடும் வெள்ளை அறிக்கை..!

 

தமிழக பாஜ தொழில் துறை வல்லுநர்கள் பிரிவு, திமுக ஆட்சியில், கல்வித் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை, 'வகுப்பறைகள் நெருக்கடியில்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது; அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், 50 சதவீதத்திற்கும் மேல், இரண்டாம் வகுப்பு அளவிலான வாசிப்பை செய்ய முடியவில்லை. எட்டாம் வகுப்பில், 60 சதவீத மாணவர்கள், அடிப்படை கணக்கீட்டில் தோல்வி அடைகின்றனர். இது, கல்வியின் தரம் குறைவின் முக்கிய சான்று. ஆரம்ப கல்வி இடைநிற்றல், 2.7 சதவீதம். இது, தேசிய சராசரியை விட, ஒன்பது மடங்கு குறைவு. உயர்கல்வி இடைநிற்றல், 8.50 சதவீதமாக உள்ளது. இது, கல்வி அமைப்பின் நம்பிக்கை குறைந்ததை காட்டுகிறது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைகிறது.

தனியார் பள்ளிகளில், 5.17 லட்சத்தில் இருந்து, 5.62 லட்சமாக உயர்வு. மக்கள் அரசு கல்வியில் நம்பிக்கை இழந்துள்ளனர். 18,000க்கும் அதிகமான ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன. 3,600க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன; இது, நேரடியாக கற்றல் தரத்தை பாதிக்கிறது. மேலும், 22 சதவீத பள்ளிகளில் குடிநீர் இல்லை. 18.60 சதவீத பள்ளிகளில், பயன்படுத்த முடியாத கழிப்பறைகள் உள்ளன. இது, மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு அமைப்பு சீர்குலைந்துள்ளது. மாணவர்கள் தற்கொலையில், 1,300க்கும் அதிகமான மாணவர் தற்கொலைகளுடன், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கல்வி அமைப்பு, ஆதரவு அமைப்பாக இல்லாமல், அழுத்த மையமாக மாறியுள்ளது.

கல்வித் துறைக்கு, 44,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு இருந்தும், 2017 முதல் கற்றல் முன்னேற்றம் இல்லை. 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் இல்லை. 1,200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புதிய சேர்க்கை இல்லை. இது, கல்வித்துறை தோல்விக்கான சான்று. கேரளா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள், குறைந்த வளத்திலும், அதிக கற்றல் முடிவுகளை அடைகின்றன. ஆனால், தமிழகம் பின் தங்கியுள்ளது. அரசு கல்லுாரிகளில், 4,000 பேராசிரியர்கள் காலியிடங்கள் உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் வாயிலாக, கல்லுாரிகள் இயங்குகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.