×

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்..!

 

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம், 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர் விஜயுடன் சேர்த்து, அமைச்சரவையில் மொத்தம், 35 பேர் உள்ளனர்.இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடந்தது. இதில் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் நிறைவு அடைந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: லஞ்சம் இல்லாத ஆட்சி, போதையில்ல தமிழகம், இளைஞர்கள் முன்னேற்றம் உள்ளிட்ட 436 தொலைநோக்கு திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.துறைவாரியாக தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கிய 436 திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திட்டங்களை ஆய்வு செய்த பிறகு முதல்வர் ஒப்புதல் பெறப்படும்.

அனைத்து துறைகளுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. போதையில்லா தமிழகம்தான் தவெக அரசின் இலக்கு. போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல் வழங்கினார். மேகதாது பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, புதிய அரசின் முதலாவது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சமீபகாலமாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது ஆளுநர் உரை நிகழும்போது உங்களுக்கே தெரியும்; சற்றே பொறுத்திருந்து நீங்களே பாருங்கள்" எனச் சஸ்பென்ஸ் வைக்கும் விதமாகப் பதிலளித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாகப் பார்த்த தமிழக மக்கள், இனிவரும் காலங்களிலும் அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிகமாகப் பார்க்க விரும்புகின்றனர் என்றும், குறிப்பாக இளம் தலைமுறையினரின் இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய உரிய நேரத்தில் முழுமையான நேரலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுவரை அரசியலில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்து, தற்போது தங்களது விருப்பப்படி புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்திய அமைச்சர்களும், முதலமைச்சரும் அவைக்குள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற நேரலைக்கான பணிகள் சரியான நேரத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.