×


"கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவை விமர்சிப்பது முட்டாள்தனமான செயல்"

 

பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப் பொம்மை எரித்தது முட்டாள்தனமான செயல் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விமர்சித்துள்ளார். 


அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இரு தரப்பு நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை பாஜகவினர் எரித்தது அதிமுக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், “அதிமுக ஒரு பெருங்கடல், அதில் கல் வீசினால் கல் தான் காணாமல் போகும். அதிமுக எழுச்சியுடன் உள்ளதால் மற்ற கட்சி நிர்வாகிகள் விருப்பபட்டு இணைகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அண்ணாமலைக்கும் வேண்டும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது. எடப்பாடி உருவப் பொம்மை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்னாகும் என பாஜகவினர் நினைத்து பார்க்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், “பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப் பொம்மை எரித்தது முட்டாள்தனமான செயல். நிர்வாகிகள் கட்சி மாறி இணைவது இயல்பு தான்,  அதில் எந்த தவறுமில்லை. அதிமுக பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணி கட்சியாக இருந்துக்கொண்டு கடுமையாக பாஜகவினர் சிலர் விமர்சிப்பது சரியில்ல, முட்டாள் தனமானது”  என விமர்சித்தார்.