×

குடையை எடுத்துட்டு போங்க... மழை வராது ஆனால் வெயில் வெளுக்கும்..!

 

 தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில், அக்டோபரில் பெரிய சம்பவங்களை எல்லாம் பார்த்து விட்டோம்.

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. அதேசமயம் அனைத்து மாவட்டங்களும் மழையை பெற்று மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போது நவம்பரில் அடியெடுத்து வைத்துள்ளோம். இம்மாதத்தை பொறுத்தவரை இயல்பை விட குறைவான மழைக்கு தான் வாய்ப்பிருக்கின்றன. எப்படியோ கடந்த மாதம் பெய்த அதிகப்படியான மழை இந்த குறையை சரிசெய்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மண்டல வாரியாக பார்க்கும் போது, வடக்கில் ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், தெற்கில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. டெல்டாவில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், மேற்கில் ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் 50 சதவீதம் கூடுதலாக மழை பெய்திருக்கிறது. உள் மாவட்டங்கள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகியவற்றில் மழை பெய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி சென்னை வானிலை ஆய்வு கணிப்பிற்கு வருவோம். தமிழகத்தில் இன்றும் (நவ.3), நாளையும் (நவ.4) வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவிழந்துள்ளன. வரும் நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.