மக்களே நோட் பண்ணிக்கோங்க..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்..!
வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் நிகழவுள்ளன. அவற்றை காணலாம்.
1. சமையல் எரிவாயு சிலிண்டர்: விலைக் குறைப்பு வாய்ப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான சர்வதேச மோதல்கள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து, அதிகபட்சமாக ரூ. 3,283 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், ஜூலை மாதத்தில் சிலிண்டர் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
'ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு' கொள்கை: மத்திய அரசின் 'ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு' (இரட்டை இணைப்பு தடை) கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ்:
-
வீடுகளுக்கு நேரடியாகக் குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பு பெற்றவர்கள், தங்களது எல்.பி.ஜி (LPG) சிலிண்டரை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
இந்த நடவடிக்கையின் மூலம், சிலிண்டர் மட்டும் வைத்திருக்கும் நுகர்வோருக்கு இனித் தங்கு தடையின்றி, மிக விரைவாகச் சிலிண்டர் டெலிவரி செய்ய வழிவகை ஏற்படும்.
2. ஆதார் அட்டை: வீட்டிலிருந்தபடியே இலவசமாகப் புதுப்பிக்கும் வசதி
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனாளர்களுக்கு முக்கிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
-
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை (Email ID) இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
-
இந்த இலவச சேவை டிசம்பர் 31, 2026 வரை அடுத்த 6 மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும்.
-
இதன் மூலம் மின்னஞ்சல் முகவரியை திருத்தம் செய்யப் பொதுமக்கள் இனி ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை; வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.
3. ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை: விதிமீறல்களுக்கான அபராதம் அதிரடி உயர்வு!
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் அபராத கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.
-
மின்சார ரயில்கள்: புறநகர் மின்சார ரயில்களில் ரூ. 10 பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்தால் விதிக்கப்பட்ட ரூ. 250 அபராதம், தற்போது ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-
விரைவு ரயில்கள்: எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ. 600 மதிப்பிலான டிக்கெட் இன்றி பயணிப்போருக்கான அபராதம் இருமடங்காகக் கூட்டப்பட்டு, ரூ. 1,620 வரை வசூலிக்கப்படுகிறது.
-
பெண்கள் பெட்டி: பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணிக்கும் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட ரூ. 500 அபராதம், இனி ரூ. 2,500 ஆக வசூலிக்கப்படும்.
-
புகைபிடித்தல் தடை: ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்களில் புகைபிடித்தால் விதிக்கப்படும் அபராதம் ரூ. 100-லிருந்து ரூ. 2,000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த மாற்றங்களை உணர்ந்து, தேவையற்ற அபராதங்கள் மற்றும் அலைச்சல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.