×

கோவையில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி!

 

கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட நிலையில் கவனமாக இருக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் வீடுகளை சுற்றி  நீர் தேங்க விடாமல், தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. 


இந்நிலையில் கோவையில் இரண்டு பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும்,  வெளியில் வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.  வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். மாநகராட்சி பகுதியில் நாள்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இருமல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா, டெங்கு காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.