ஸ்வீட் பிரியர்கள் ஷாக்..! பிரபல அல்வா கடையில் வாங்கப்பட்ட அல்வாவில் தேள்!
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல 'சாந்தி ஸ்வீட்ஸ்' கடையில் வாங்கப்பட்ட அல்வா பொட்டலத்தில் தேள் (நட்டுவாக்காலி) இருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று கடந்த ஓரிரு நாள்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது திருநெல்வேலி அல்வா பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன் என்பவர், கடந்த ஜூலை 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5 மணியளவில் சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் நான்கு கால் கிலோ மற்றும் ஒரு அரை கிலோ அல்வா பொட்டலங்கள் மற்றும் கார மிக்சர் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு திரும்பிய சுகந்தன், நேற்று காலை (ஜூலை 15) அரை கிலோ அல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, அதற்குள் தேள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அவர், சாந்தி ஸ்வீட்ஸ் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பரவ தொடங்கியதும், நெல்லையிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனிடம் பேசியதாவது, "அல்வாவை மூடி இருக்கும் கவர் தங்கள் கடையினுடையது தான்" என்பதை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் அவர், "இருப்பினும், தங்கள் அல்வாக்களில் பூச்சிகள் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. திருநெல்வேலி முழுவதும் நூற்றுக்கணக்கான "சாந்தி ஸ்வீட்ஸ்" என்ற பெயரில் அல்வா கடைகள் இயங்கி வருகின்றன.
மேலும், தங்கள் நிறுவனத்திற்கு களங்கம் விளைவிப்பதற்காகவே இதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன். அல்வா தயாரிப்பு முழுமையாக கருவிகளின் உதவியுடன் நடைபெறுவதால், இதுபோன்று நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" என்றார்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருவது குறித்து திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் புஷ்பராஜிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தயாரிப்பு கூடத்தில் அதிகாரி புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு பரிசோதனைகளையும் மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்புத் துறை வழங்கிய அந்த நோட்டீஸில், அல்வா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தாமிரபரணி தண்ணீரின் தரம் குறித்த சான்றிதழ், அல்வா தயாரிப்பு கூடத்தின் ஜன்னல்களில் தூசிகள் உள்ளே வராதவாறு கம்பி வலை அமைத்தல், தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் சுகாதாரச் சான்றிதழ், அல்வாவின் தரம் குறித்த ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறுவதற்கான முயற்சி, தாமிரபரணி தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது மற்றும் அதன் தரம் குறித்த தனிச் சான்றிதழ் உள்ளிட்ட 15 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. உணவு பாதுகாப்புத் துறையின் விசாரணை மற்றும் ஆய்வின் முடிவுகள் வெளியான பின்னரே, இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை முழுமையாக வெளிவரும்.
அல்வாக்களின் தரத்தினை சோதிப்பதற்காக சேம்பிள்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இச்சம்பவம் குறித்த முழு விவரங்களும் தெரியவரும். மேலும், அல்வாவை தயாரிக்கும்போது 100 டிகிரிக்கு மேல் வெப்பம் ஏற்படும், அதில் முழுமையாக இது போன்று தேள் இருக்க வாய்ப்பே இல்லை என கடையின் தரப்பில் அதிகாரியிடம் விளக்கம் அளித்தாகவும் கூறப்படுகிறது.