×

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்!

 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் இறந்த விவகாரம் தொடர்பான வழக்கு, இன்று மாநில மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

ராம்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர் செல்வகுமாரிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில், மற்றொரு மருத்துவரான பாலசுப்பிரமணியம், சிறை மருத்துவர் நவீன் குமார், சிறைக் கண்காணிப்பாளர் அன்பழகன் மற்றும் சிறைக் காவலர் ஜெயராமன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளித்தனர்.

உடற்கூராய்வு செய்த பாலசுப்ரமணியம் அளித்த வாக்குமூலத்தில், ராம்குமார் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் அப்துல் காதர் ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவித்தது தெரியாது எனவும், சோதனை செய்தபோது பிரேதத்தின் அத்தகைய காயங்கள் இல்லை எனவும் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் சிறை மருத்துவர் நவீன் குமார் அளித்த மருத்துவ சான்றிதழ்  அடிப்படையில் அவரிடம் குறுக்கு விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், குறிப்பாக ராம் குமார் சிறையிலேயே இறந்து போனாரா? என்பதை மையப்படுத்தி குறுக்கு விசாரணை நடைபெற்றதாகவும் ராம் குமார் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நவீன் குமார் சமர்பித்த விபத்து பதிவேடு மற்றும் மருத்துவச் சான்றிதழில் சிறையில் பரிசோதனை மேற்கொள்ளும்போதே ராம்குமாருக்கு நாடித் துடிப்பு இல்லை எனவும், அவருக்கு கார்டியாக் அரஸ்டு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதியாக சொல்லாமல் கேள்விக் குறியீட்டு சான்றிதழில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதயத் துடிப்பை மீட்டெடுக்க தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணையின் போது மருத்துவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசாரணை முடிந்து வழக்கை வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஒத்திவைத்துள்ளது. 

ராம்குமார் சிறையிலிருந்து மருத்துவமனை வரும் வழியில்தான் உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்த நிலையில், சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக சிறை மருத்துவர் நவீன்குமார் சான்றிதழ் அளித்திருப்பது முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.