×

"தரம் தாழ்ந்தவர்களை கண்டுகொள்ளாதீர்கள்" - ரசிகர்களுக்கு சூர்யா நற்பணி மன்றம் வேண்டுகோள்! 

 

நவம்பர் 2ஆம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் வெளியானது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட புனைவு படமாகவே ஜெய்பீம் வெளியாகியிருந்தது. குறிப்பாக 90-களில் நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது திறமையாக வாதாடி பழங்குடியின பெண்ணுக்கு நீதி பெற்று கொடுத்த கதையை ஒருசில மாற்றங்களுடன் இயக்குநர் த.செ.ஞானவேல் படமாக இயக்கியிருந்தார். இருளர் இன மக்களின் இன்னல்களையும் காவல் துறையின் அத்துமீறல்களையும் தோலுரித்து காட்டியிருந்தது.

ஆனால் படம் பேச வந்த கருத்து மக்களிடம் சென்று சேர்வதற்குள் வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் ஒரேயொரு காட்சிக்காக திசைதிருப்பிவிட்டனர். எஸ்ஐ கேரக்டர் வடிக்கப்பட்ட விதம் தான் அதற்குக் காரணம். அவரின் பெயர் குருமூர்த்தி என்பதும், அவர் வீட்டு காலண்டரில் அக்னி கலசம் இருந்ததும் தங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கொந்தளித்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல பாமக தலைவர் அன்புமணி சூர்யாவுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு சூர்யா எழுதிய பதில் அறிக்கை, பதிலடி அறிக்கையாக இருந்தது. இச்சூழலில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, சூர்யாவை அடித்தாலோ, எட்டி உதைத்தாலோ ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்க, சூர்யா ரசிகர்களோடு விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டரில் களமிறங்கி #WeStandWithSuriya என்ற ஹேஸ்டேக் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பாமகவினர், வன்னியர் சங்கத்தினருக்கும் ரசிகர்களுக்கும் போர் வெடித்துள்ளது.

இந்நிலையில் அகில இந்திய சூர்யா நற்பணி மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில், "ஜெய்பீம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். இதுபோன்ற நியமற்ற விஷயங்களைப் பொதுச்சமூகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் எப்பொதும்போல் நாம் பொறுமையாக இருப்பது தான் சிறப்பு. ஆகவே நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைதளப் பதிவுகளாகவோ எதிர்வினையாற்ற வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். சூர்யா அண்ணன் கற்பித்த வழியில் நடப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.